கொரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் மீது நடவடிக்கை


கொரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 31 July 2021 10:28 PM IST (Updated: 31 July 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தொடர்ந்து இருந்து வருகிறது. தினமும் 40 பேருக்கு மேல் தொற்று உறுதியாகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு ஊட்டியில் அனைத்து கடைகளும் திறந்து செயல்பட்டு வருகின்றன. அதற்கு முன்னதாக வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் வியாபாரிகள், ஊழியர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அதிரடியாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- கொரோனா தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் மார்க்கெட் மற்றும் இதர வெளிப்புற கடைகளில் வியாபாரிகள், ஊழியர்கள் என அனைவரும் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள், ஊழியர்கள் யாரேனும் பணிபுரிந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை மற்றும் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதன்படி கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை நகராட்சி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பலர் வருவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story