சம்பளம் கேட்டு நகராட்சி அலுவலகத்தை தற்காலிக சுகாதார பணியாளர்கள் முற்றுகை
ஊட்டியில் சம்பளம் கேட்டு நகராட்சி அலுவலகத்தை தற்காலிக சுகாதார பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. அப்போது தற்காலிகமாக சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடு, வீடாக தொற்று அறிகுறிகள் தென்படுகிறதா, சர்க்கரை, ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்களா, தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன்படி ஊட்டி நகராட்சியில் 272 பேருக்கு தற்காலிகமாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 36 வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் தலா 5 முறைக்கு மேல் கணக்கெடுப்பு நடத்தினர். மொத்தம் கடந்த ஜூன் 9-ந் தேதி முதல் ஒரு மாதம் பணிபுரிந்தனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை
இந்த நிலையில் நேற்று ஒரு மாத சம்பளம் வழங்க கோரி தற்காலிக சுகாதார பணியாளர்கள் ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கு நகராட்சி ஆணையாளர் இல்லாததால் பேச்சுவார்த்தை நடத்த நீண்ட நேரம் காத்திருந்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் கொரோனா கள பணியில் 272 பேர் பணிபுரிந்தோம். எங்களுக்கான ஒரு மாத ஊதியம் பல நாட்களான பிறகும் தராமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 நாட்களில் சம்பளம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. 20 நாட்களை கடந்தும் வழங்கவில்லை. எனவே எங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story