கறிக்கோழி கொள்முதல் விலை தொடர் சரிவு


கறிக்கோழி கொள்முதல் விலை தொடர் சரிவு
x
தினத்தந்தி 31 July 2021 10:57 PM IST (Updated: 31 July 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

சுல்தான்பேட்டை

கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள்

தமிழகத்தில் பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பல்லடம், ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

 இந்தப் பண்ணைகளில் தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில், தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

இந்த விலையானது கறிக்கோழி நுகர்வு ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.100 வரை செலவாகிறது.

கொள்முதல் விலை குறைவு

இந்த நிலையில், கடந்த 20-ந் தேதி ரூ.133 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) 25-ந் தேதி ரூ.117, 30-ந் தேதி ரூ.113 என குறைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், கோழித்தீவனம் தயாரிப்புக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான சோயா கடந்த 2 மாதத்துக்கு முன்பு கிலோ ரூ.72 ஆக இருந்தது. தற்போது, கடும் தட்டுப்பாடு காரணமாக சோயா விலை கிலோ ரூ.102 ஆக உயர்ந்துள்ளது.  இதன் காரணமாக கறிக்கோழி உற்பத்தி செலவு கிலோ ரூ.88-ல் இருந்து தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஆடி மாதம் காரணமாக கறிக்கோழி நுகர்வு சரிந்து பண்ணை கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் போதிய லாபம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஆடி மாதம் கோழி விற்பனை குறையும் என்பதால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னே 20 சதவீதம் வரை உற்பத்தியை குறைத்தும் கொள்முதல் விலை குறைந்து வருவதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்து உள்ளனர் என்றனர்.

Next Story