கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் 8-ந்தேதி வரை தடை


கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் 8-ந்தேதி வரை தடை
x
தினத்தந்தி 31 July 2021 7:51 PM GMT (Updated: 31 July 2021 7:51 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் 8-ந்தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.

பெரம்பலூர்:
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் அளிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளை தொடர்ந்து கடந்த மாதம் 5-ந்தேதி முதல் பெரம்பலூரில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. தற்போது ஆடி மாதம் என்பதால் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் கொரோனா 3-ம் அலை வரலாம் என்று மருத்துவக்குழுவினர் கூறுவதால், அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்க கலெக்டர் முடிவு எடுத்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பக்தர்கள் அதிகளவில் கோவில்களில் கூடி வருவதால், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில், பாலமுருகன் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி கோவில், குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவில், எசனை வேணுகோபாலசுவாமி கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலை கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 35 கோவில்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 8-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டுள்ளார்.

Next Story