உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவன் கழுத்தை நெரித்து கொலை; கள்ளக்காதலனுடன் பெண் கைது
சென்னகிரி தாலுகாவில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது கள்ளக்காதலனும் சிக்கினார்.
சிக்கமகளூரு:
குடும்ப தகராறு
தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா வடேனால் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ்(வயது 38). இவரது மனைவி குசுமா(30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி அறிந்த குசுமாவின் தூரத்து உறவினரான லிங்கப்பா(35) என்பவர், அடிக்கடி லோகேசை சந்தித்து சமாதானப்படுத்தி வந்தார். மேலும் அவர்களது வீட்டுக்கும் சென்று வந்தார்.
இதன்மூலம் குசுமாவுக்கும், லிங்கப்பாவுக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். லோகேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் லிங்கப்பாவை குசுமா வீட்டிற்கே வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.
கள்ளக்காதலை கைவிட மறுப்பு
இந்த நிலையில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் லோகேசுக்கு தெரியவந்தது. அவர் குசுமாவை கண்டித்தார். மேலும் கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி எச்சரித்தார். ஆனால் கள்ளக்காதலை கைவிட மறுத்த குசுமா, தொடர்ந்து தனது கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இந்த நிலையில் தங்களது உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் லோகேசை கொலை செய்திட குசுமாவும், அவரது கள்ளக்காதலன் லிங்கப்பாவும் திட்டமிட்டனர்.
அதன்படி கடந்த 29-ந் தேதி அன்று வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த லோகேஷ், இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் கண்விழித்த குசுமா, தனது கள்ளக்காதலன் லிங்கப்பாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்தார்.
கைது
அதன்பேரில் குசுமாவின் வீட்டுக்கு லிங்கப்பா வந்தார். பின்னர் லிங்கப்பாவும், குசுமாவும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த லோகேசின் கழுத்தை நெரித்து படுகொலை செய்தனர். பின்னர் லிங்கப்பா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மறுநாள் காலையில் ஒன்றும் அறியாததுபோல் விழித்தெழுந்த குசுமா, தனது கணவர் லோகேஷ் திடீரென உடல்நலக்குறைவால் செத்து விட்டதாகக் கூறி நாடகமாடினார்.
இருப்பினும் இதுபற்றி லோகேசின் உறவினர்கள் சென்னரிகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லோகேசின் உடலை கைப்பற்றினர். பின்னர் குசுமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது குசுமா, தனது கள்ளக்காதலன் லிங்கப்பாவுடன் சேர்ந்து கணவர் லோகேசை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் குசுமாவையும், லிங்கப்பாவையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story