குளச்சல் போர் வெற்றித்தூணில் ராணுவ வீரர்கள் மரியாதை
திருவாங்கூர் சமஸ்தானம், டச்சுப்படையை வென்ற தினமான நேற்று குளச்சல் போர் வெற்றித்தூணில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
குளச்சல்,
திருவாங்கூர் சமஸ்தானம், டச்சுப்படையை வென்ற தினமான நேற்று குளச்சல் போர் வெற்றித்தூணில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
டச்சுப்படையை வென்ற தினம்
குளச்சல் கடற்கரையில் 280 வருடங்களுக்கு முன்பு திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும், டச்சு படையினருக்கும் போர் நடந்தது. இரண்டு மாதங்களாக நடைபெற்ற இந்த போரில் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி திருவாங்கூர் படை, டச்சுப்படையை வென்றது. இந்த போரின் வெற்றி நினைவாக திருவாங்கூர் சமஸ்தானம் குளச்சல் கடற்கரையில் வெற்றித்தூண் ஒன்றை நிறுவியது.
இந்த வெற்றித்தூணில் வெற்றி தினத்தன்று மெட்ராஸ் ரெஜிமெண்ட் சார்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக வெற்றித்தூணில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி எளிமையாக நடைப்பெற்றது.
மரியாதை
இந்தநிலையில், டச்சுப்படையை வென்ற தினமான நேற்று குளச்சல் போர் வெற்றித்தூணில் மரியாைத செலுத்தும் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., மெட்ராஸ் ரெஜிமெண்ட் 11-வது பட்டாலியன் கமெண்டிங் அலுவலர் சஞ்சய் ரஞ்சன், சுபேதார் ஆனந்த் உள்பட 13 வீரர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதில் குளச்சல் நகராட்சி சுகாதார அலுவலர்கள் நட்ராயன், ராமச்சந்திரன், பங்குத்தந்தை மரிய செல்வன் உள்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆம்ஆத்மி கட்சி
இதேபோல, ஆம் ஆத்மி கட்சி சார்பில் குளச்சல் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பனிமயம் தலைமையில் மலர் வளையம் வைத்து நிர்வாகிகள் வீரவணக்கம் செலுத்தினர்.
Related Tags :
Next Story