கர்நாடக மந்திரிசபையை ஒரேகட்டமாக விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் முடிவு


கர்நாடக மந்திரிசபையை ஒரேகட்டமாக விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் முடிவு
x
தினத்தந்தி 1 Aug 2021 1:43 AM IST (Updated: 1 Aug 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி பயணத்தை முடித்துவிட்டு பசவராஜ் பொம்மை பெங்களூருவுக்கு திரும்பினார். மந்திரிசபையை ஒரேகட்டமாக விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூரு:

பெங்களூருவுக்கு திரும்பினார்

  கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா கடந்த மாதம்(26-ந்தேதி) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 28-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியதற்காக பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்காகவும், மந்திரிசபை விரிவாக்கம் செய்யவும் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் பசவராஜ் பொம்மை டெல்லி சென்றிருந்தார்.

  டெல்லியில் பிரதமர் மோடி உள்பட கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். இந்த சுற்றுப்பயணம் நிறவைு பெற்றதை தொடர்ந்து நேற்று மாலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பினார்.

அனுமதி வழங்கவில்லை

  இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, பா.ஜனதா மேலிடம் உடனடியாக அனுமதி வழங்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அடுத்த மாதம்(ஆகஸ்டு) 5-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ளதாகவும், முதற்கட்டமாக மூத்த தலைவர்கள் உள்பட 20 பேர் மந்திரிகளாக பொறுப்பு ஏற்க வாய்ப்புள்ளதாகவும், அவர்களில் ஆர்.அசோக், ஸ்ரீராமுலு, கோவிந்த கார்ஜோள் ஆகிய 3 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பதவி வழங்கலாம் என்றும் கூறப்பட்டது.

  ஆனால் டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம், மந்திரிசபை விரிவாக்கத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறி இருப்பதாக தெரிகிறது. அதாவது எடியூரப்பா இல்லாததால், 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, சாதி அடிப்படை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர்கள், கட்சிக்காக தொடர்ந்து உழைத்து வருபவர்களை அடையாளம் கண்டு மந்திரிபதவி வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த வாரம் விரிவாக்கம்

  இன்னும் 22 மாதங்களே ஆட்சி காலம் இருப்பதால், முதற்கட்டமாக 20 பேர், அடுத்த கட்டமாக மற்ற 12 பேர் என மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக ஒரே கட்டத்தில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்து, மந்திரிசபையில் உள்ள அனைத்து இடங்களையும் நிரப்ப பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் பேசுவதற்காக அடுத்த வாரம் மீண்டும் பசவராஜ் பொம்மை டெல்லி செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

  அப்போது மந்திரிசபையில் இடம் பெறும் நபர்களின் பட்டியலை வழங்கி, அதற்கு ஒப்புதல் பெற முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் தள்ளி போவதுடன், அடுத்த வாரம் 5-ந் தேதிக்கு பின்பே நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இப்போதைக்கு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படாது என்று தெரிகிறது.

துணை முதல்-மந்திரி...

  எடியூரப்பாவின் மந்திரிசபையில் 3 பேர் துணை முதல்-மந்திரிகளாக இருந்தனர். எடியூரப்பாவுக்கு பதிலாக புதிய தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தில் 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு இருந்தது. எடியூரப்பாவுக்கு மாற்றாக, அந்த 3 துணை முதல்-மந்திரிகளாக இருந்த லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண், கோவிந்த கார்ஜோள் ஆகிய 3 பேரில் ஒருவரை முதல்-மந்திரியாக நியமிக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டு இருந்தது.

  ஆனால் கட்சி மேலிடத்தின் திட்டம் நிறைவேறாமல் போனது. புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவரது தலைமையிலான மந்திரிசபையில் துணை முதல்-மந்திரிகள் யாரையும் நியமிக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக துணை முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Next Story