கொரோனா 3-வது அலை உருவாகாமல் தடுக்க அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்; குமாரசாமி பேட்டி
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை உருவாகாமல் தடுக்க அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு;
பெங்களூரு புறநகர் நெலமங்களாவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
முன் எச்சரிக்கை நடவடிக்கை
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆகஸ்டு மாதத்திலேயே 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறி வருவதை கவனித்து வருகிறேன். மாநிலத்தில் தற்போது தினமும் 50 முதல் 100 வரையிலான கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபோல், கொரோனா 2-வது அலை உருவாகும் முன்பாகவும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.
அப்போது நிபுணர்கள் கூறிய பரிந்துரையை ஏற்காமல் அரசு அலட்சியமாக இருந்து விட்டது. இதன் காரணமாக 2-வது அலை உருவாகி ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிலை உருவானது. ஏராளமானவர்கள் தங்களது உயிரை பறி கொடுத்தார்கள். தற்போது 3-வது அலை உருவாகும் முன்பாகவே அரசு சுதாரித்து கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாநிலத்தில் 3-வது அலை உருவாகாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பது அவசியமாகும்.
குற்றங்கள் அதிகரிப்பு
பெங்களூருவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே குற்றங்கள் நடப்பது அதிகரித்து விட்டது. பெங்களூருவில் கூலிப்படைகள் மூலம் கொலை சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. ரூ.200-க்கு கூட கொலை நடக்கிறது. ரவுடிகள் தினமும் கொலை செய்யப்படுகிறார்கள். இது மக்களிடையே பீதியை ஏற்படுத்துகிறது. பெங்களூருவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களை, தடுப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில், வடகர்நாடக மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தாமல், மந்திரிசபை விரிவாக்கம் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழுவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அமைக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களை மழை பாதித்த பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்-மந்திரி உத்தரவிட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக சாதாரண மக்கள் முதல்-மந்திரி சந்திக்க முடியாத நிலை உள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சாதாரண மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story