மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்; பசவராஜ் பொம்மை திட்டவட்டம்
மேகதாதுவில் அணைகட்டுவதற்கு கர்நாடகத்திற்கு உரிமை இருப்பதால், அணையை கட்டியே தீருவோம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
விரைவில் அனுமதி
கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை கடந்த 28-ந் தேதி பதவி ஏற்றிருந்தார். இதையடுத்து, பிரதமர் மோடி, பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக நேற்று முன்தினம் அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருந்தார். அங்கு பிரதமர் மோடி மற்றும் ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவாத்தை பசவராஜ் பொம்மை சந்தித்து பேசி இருந்தார்.
அப்போது காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் மேகதாதுவில் புதிய அணைகட்டுவதற்கு, கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்கும்படி கோரி கடிதம் ஒன்றையும் பசவராஜ் பொம்மை வழங்கி இருந்தார்.
உண்ணாவிரதம்
இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தலைவரும், கர்நாடக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்டுவதாக அறிவித்துள்ளதற்கு எதிராக வருகிற 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். கர்நாடகத்தில் அவர், ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி இருந்ததால், மேகதாது விவகாரத்தில் அண்ணாமலைக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது குறித்து டெல்லியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
அணை கட்டியே தீருவோம்
தமிழக பா.ஜனதா தலைவராக உள்ள அண்ணாமலை, மேகதாதுவில் அணைகட்டுவதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருப்பது குறித்து எனது கவனத்திற்கும் வந்தது. உண்ணாவிரதம் இருக்கட்டும், உணவு வேண்டுமானாலும் சாப்பிடட்டும். மேகதாதுவில் அணைகட்டுவதற்கு கர்நாடகத்திற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது.
அதனால் மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story