50 சதவீத இருக்கைகளுக்கு மேல் ஓட்டல்களில் உணவருந்த அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து: சென்னை மாநகராட்சி
சென்னையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வழிமுறைகள்
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு வருகிற 9-ந்தேதி காலை 6 மணி வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக வணிக வளாகங்கள், அங்காடிகள் உள்பட பல்வேறு பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலமாக...
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்குள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 608 மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 57 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொழில் உரிமம் ரத்து
மேலும், அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் உணவருந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாமல் 50 சதவீதத்திற்கும் மேல் உணவருந்த அனுமதிக்கும் ஓட்டல் மற்றும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களுக்கான தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story