இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்


இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Aug 2021 1:26 PM GMT (Updated: 1 Aug 2021 1:26 PM GMT)

இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் என்றும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு மனிதநேயமற்றது; ஏற்றுக்கொள்ள முடியாதது.

சிங்களப் படையினர் நடத்திய இனப்படுகொலைகளில் உயிர் பிழைப்பதற்காகவும், சிங்களப் படையினரின் பாலியல் அத்துமீறல்கள் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும்தான் அவர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். அவர்கள் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையவில்லை.

அகதிகளுக்கு வாழ்வளிப்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடாததும், அவர்களை சட்ட விரோத குடியேறிகள் என்று கூறுவதும் இந்தியாவின் உயரத்திற்கு ஏற்றதல்ல. சொந்த நாடுகளில் கொடுமைக்கு உள்ளாகி இந்தியாவில் நீண்ட காலமாக தங்கியிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த உரிமையை இலங்கை தமிழர்களுக்கு மட்டும் மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

எனவே, இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதுதான் சரியானது. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story