3-வது குருதி சார் ஆய்வு: தமிழகத்தில் 66.2 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி


3-வது குருதி சார் ஆய்வு: தமிழகத்தில் 66.2 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி
x
தினத்தந்தி 1 Aug 2021 1:58 PM GMT (Updated: 1 Aug 2021 1:58 PM GMT)

தமிழகத்தில் நடத்தப்பட்ட 3-வது குருதி சார் ஆய்வில், 66.2 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தின் அளவு குறித்து தெரிந்து கொள்ள குருதி சார் ஆய்வு (செரோ சர்வே) நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தை ஆய்வு செய்ய பல்வேறு கிராமங்களில் இருந்து சிலருக்கு ரத்த பரிசோதனை மூலம் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 3 குருதி சார் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தமிழகத்தில் உள்ள கிராமம், புறநகர், நகர்ப்புற பகுதிகளில் உள்ள 888 குழுவினர் கொண்டு இந்த குருதி சார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக 30 பேர் என்ற எண்ணிக்கையில் மொத்தம் 26 ஆயிரத்து 610 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 66.2 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் 82 சதவீதம்

தமிழகத்தில் 26 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ரத்த பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை முடிவில் 17 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது 66.2 சதவீதம் ஆகும். 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல்வேறு பகுதியில் தொடர்பின்றி இருந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் அதிகபட்சமாக விருதுநகரில் பரிசோதனை செய்யப்பட்டதில் 84 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து சென்னையில் 82 சதவீதத்தினருக்கும், மதுரையில் 79 சதவீதத்தினருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்சமாக பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஈரோட்டில் 37 சதவீதத்தினருக்கும், கோவையில் 43 சதவீதத்தினருக்கும், திருப்பூரில் 46 சதவீதத்தினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது.

8 ஆயிரத்து 495 பேர்

இதைப்போல் தமிழகத்தில் கடந்த ஆண்டு (2020) அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் 26 ஆயிரத்து 347 பேர் கொண்டு நடத்தப்பட்ட குருதி சார் ஆய்வில் 8 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆயிரத்து 921 பேர் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 8 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story