குடியாத்தம் அருகே மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம்


குடியாத்தம் அருகே மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2021 7:39 PM IST (Updated: 1 Aug 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள், செந்நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக மோர்தானா மூங்கில் புதர் மற்றும் கல்லப்பாடி காப்புக்காடுகள் பகுதியில் சிறுத்தைகள் உள்ளது.

குடியாத்தம் வனப்பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் பல ஆயிரம் ஏக்கரில் செம்மர தோட்டங்கள் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் வனத்துறையினர் செம்மர பாதுகாப்பிற்காக காப்புக்காடுகள் வனப்பகுதியில் ரோந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் ரோந்து சென்றபோது உறுமல் சத்தம்  கேட்டது அந்த உறுமல் சிறுத்தைகள் கூட்டத்தைச் சேர்ந்தது.

சிறுத்தைகளின் உறுமல் சத்தம் கேட்ட பகுதியில் நேற்று பகலில் பார்த்தபோது  சிறுத்தைகளின் கால் தடங்கள் இருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது உறுதியானது.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காப்புக் காடுகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமங்களின் அருகே சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால்  வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
கல்லப்பாடி ஊராட்சி முதலியார் ஏரி, கணவாய் மோட்டூர், துருகம், மூலகாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பொதுமக்கள் தங்களின் கால்நடைகளை இரவு நேரங்களில் பத்திரமாக பாதுகாப்பாக கட்டி வைக்குமாறும், தேவையின்றி காப்புக் காடுகள் மற்றும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் மேலும் காப்புக் காடுகள் வழியாக மற்ற பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் கூறியுள்ளனர். 

Next Story