திருப்பத்தூர் மாவட்டத்தில் கோவில், ஏரி, நீர்வீழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு தடை


திருப்பத்தூர் மாவட்டத்தில் கோவில், ஏரி, நீர்வீழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு தடை
x
தினத்தந்தி 1 Aug 2021 2:09 PM GMT (Updated: 1 Aug 2021 2:17 PM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒரு வாரத்துக்கு கோவில்கள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரானோ தொற்றின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  தற்போது நமது அண்டை மாநிலங்களில் கொரானோ தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாநில எல்லைகளைக் கொண்டுள்ள நமது மாவட்டமும் பாதிப்படையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

ஆகவே பொதுமக்களும், வணிகப்பெருமக்களும் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றினால் மட்டுமே மூன்றாவது அலை தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும். எனவே பொது மக்களின் நலன் கருதி வருகிற நாட்களில் அனைத்து மதம் சார்ந்த விழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் மக்கள் கூட்டமாக கூடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. மதம் சார்ந்த விழாக்கள், கொண்டாட்டங்கள் மட்டுமின்றி மக்கள் அதிக அளவில் கூட வாய்ப்பு இருக்கின்ற ஏனைய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கூட இது பொருந்தும். 

குறிப்பாக இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை அனைத்து கோவில்கள், ஆறுகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டமாக கூடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறையினர் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

ஆகவே பொதுமக்கள் கொரானோ நோய்த்தொற்றின் தாக்கத்தில் இருந்து நம்மையும், குடும்பத்தையும் பாதுகாக்கும் பொருட்டு, மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்படுகின்ற இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story