கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தங்கி சிகிச்சை பெற அனுமதி கிடையாது - கலெக்டர் அருண் தம்புராஜ் தகவல்


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தங்கி சிகிச்சை பெற அனுமதி கிடையாது - கலெக்டர் அருண் தம்புராஜ் தகவல்
x
தினத்தந்தி 1 Aug 2021 8:20 PM IST (Updated: 1 Aug 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தங்கி சிகிச்சை பெற அனுமதி கிடையாது என கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் தாலுகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளான கள்ளிமேடு, தென்னம்புலம், தேத்தாகுடி தெற்கு,தேத்தாகுடி வடக்கு ஆகிய பகுதிகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். கண்டிப்பாக வீட்டில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கப்படமாட்டாது. குறைந்தபட்சம் 7 நாட்களாவது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் தங்களை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். கொரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரம்) சண்முகசுந்தரம், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, திட்ட அலுவலர் பீட்டர் பிரான்சிஸ், வேதாரண்யம் கோட்டாட்சியர் துரைமுருகன், தாசில்தார் ரமாதேவி, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, என்ஜினீயர் பிரதான் பாபு, ஆய்வாளர் வெங்கடாசலம், டாக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story