மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்கள் வெளியீடு: தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிக்கு வந்துள்ளனர்


மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்கள் வெளியீடு: தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிக்கு வந்துள்ளனர்
x
தினத்தந்தி 1 Aug 2021 2:59 PM GMT (Updated: 1 Aug 2021 2:59 PM GMT)

தமிழகத்தில் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் வந்து சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

சென்னை,

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. ‘எழுதுக' என்ற அமைப்பின் மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புத்தகங்களை எழுதிய மாணவர்கள் சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புத்தகங்களை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பேரன் ஷேக் தாவூத் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

பள்ளிகள் திறக்கலாமா?

பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

பள்ளிகள் திறப்பு தொடர்பாக துறை ரீதியான ஆலோசனை நடைபெற்று வருகிறது. மருத்துவ வல்லுனர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 3 மாநிலங்களில் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்தகால செயல்பாடுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டு கடந்த 19-ந்தேதி பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் திருப்தி இல்லாத மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 23 மாணவர்கள் மட்டும் மறுதேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

அரசு பள்ளியில் 2 லட்சம் மாணவர்கள்

இது தவிர தனித்தேர்வர்கள் 39 ஆயிரத்து 579 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்துள்ளனர்.

கொரோனாவால் இறந்த அரசு ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. திருச்சியில் மட்டும் 14 அரசு ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பள்ளிகள் மீதுநடவடிக்கை

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தைக் குறைப்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். விரைவில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவிக்கப்படும். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை தனியார் பள்ளிகள் முறையாக பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம்.

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இதுவரை எந்த பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகளை தண்டிப்பதைவிட அறிவுறுத்தவே நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் இதுவரை 8-ம் வகுப்பு மாணவர் மட்டுமே புத்தகம் எழுதி இருக்கிறார். அவரது சாதனையை முறியடித்து கோவையைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி புத்தகம் எழுதி சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story