திண்டுக்கல்லில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல்லில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். அதையடுத்து அனைத்து துறை அதிகாரிகளும் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கொரோனா வைரஸ் உருவ பொம்மைகளை அணிந்து கலந்துகொண்டனர். பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது.
இதையடுத்து பஸ் நிலையத்தில் முக கவசம் அணியாமல் இருந்த பயணிகளிடம் கொரோனா வைரசின் பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூறி கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை பஸ்களில் கலெக்டர் ஒட்டினார். மேலும் பயணிகளுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாநகர்நல அலுவலர் லட்சிய வர்ணா, சுகாதார துணை இயக்குனர்கள் நளினி, ஜெயந்தி, சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்று 3-வது அலையில் பொதுமக்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (அதாவது நேற்று) தொடங்கப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் ஒரு வாரத்துக்கு நடக்கிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 90 ஆயிரம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story