நான் மட்டும் பிறக்கவில்லை என்றால் ‘வன்னியர் சமுதாயம் கடைக்கோடியில் நின்றிருக்கும்’ டாக்டர் ராமதாஸ் பேச்சு


நான் மட்டும் பிறக்கவில்லை என்றால் ‘வன்னியர் சமுதாயம் கடைக்கோடியில் நின்றிருக்கும்’ டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 1 Aug 2021 8:46 PM IST (Updated: 1 Aug 2021 8:46 PM IST)
t-max-icont-min-icon

‘நான் மட்டும் பிறக்கவில்லை என்றால் வன்னியர் சமுதாயம் கடைக்கோடியில் நின்றிருக்கும்’ என்று பாராட்டு விழாவில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு போராடிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு, பா.ம.க., வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் ஆகியவற்றின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இணையவழியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, செய்தித்தொடர்பாளர் வக்கீல் கே.பாலு, வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்கத்தலைவர் சிவப்பிரகாசம், பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் டாக்டர் ராமதாசை வாழ்த்தியும், பாராட்டியும் பேசினார்கள்.

டாக்டர் ராமதாஸ் பேச்சு

டாக்டர் ராமதாஸ் ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ம.க.வால் ஆட்சியை பிடிக்கவில்லை என்ற வருத்தம், ஏக்கம், கனவு என்னை வாட்டிக்கொண்டிருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் பெருமகிழ்ச்சி கிடையாது. நாம் நம்முடைய இலக்கை இன்னும் அடையவில்லை. ஆட்சியில் இருந்து 370 சமுதாய மக்களுக்கும் சமூக நீதி, இட ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு உள்பட உரிமைகளை பெற்று தருவதற்கு அன்புமணி ராமதாஸ் அந்த இடத்தில் (முதல்-அமைச்சர் பதவி) உட்கார வேண்டும். அதை நோக்கி தான் நம்முடைய பயணம் இருக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்துவிட்டு மற்ற நேரத்தில் படுத்துக்கொண்டிருந்தால் நம்முடைய இலக்கை அடைய முடியாது. நான் மட்டும் பிறக்கவில்லை என்றால், வன்னியர் சமுதாயம் கடைக்கோடியில் ரொம்ப மோசமாக இருந்திருக்கும். இந்த இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களுக்கு கடந்த 33 ஆண்டுகளில் உங்கள் சாதிக்கு என்ன கிடைத்தது? என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் கேளுங்கள். அதன்பின்னர் எதிர்ப்பவர்கள் என்னை அழையுங்கள். நான் உங்களுக்கு புள்ளி விவரங்களோடு புரிய வைக்கிறேன். தற்போது வறட்டு கூச்சல் போட வேண்டாம். நான் சமூக நீதியின் பக்கம் நிற்பவன்.

தற்போது இடஒதுக்கீடு பெற்றதன் மூலம் பாதி இலக்கை அடைந்துள்ளோம். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முழு இலக்கை அடைவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அன்புமணி வாழ்த்து

அன்புமணி ராமதாஸ் வாழ்த்தி பேசும்போது, கூறியதாவது:-

டாக்டர் ராமதாஸ் இல்லை என்றால் யாருக்கும் இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. ராமதாஸ் மட்டும் பிறக்கவில்லை என்றால் 108 ஆம்புலன்ஸ் திட்டம், சேலம் ரெயில்வே கோட்டம், தேசிய சுகாதார திட்டம் உள்பட பல திட்டங்கள் வந்திருக்காது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. இது முதல் கட்டம் தான். இதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை சாதிக்கான இட ஒதுக்கீடாக பார்க்காதீர்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்கானதாக பாருங்கள். பின்தங்கிய வன்னியர் சமுதாயம் முன்னேற்றம் அடைந்தால், தமிழகம் வளர்ச்சி பெறும்.

ராமதாசின் உழைப்பு, உறுதியின் மூலமாகவே இட ஒதுக்கீடு பெற முடிந்திருக்கிறது. சமூகநீதி பிரச்சினையாக கருதியதால் அ.தி.மு.க. கொண்டு வந்த சட்டத்தை தி.மு.க. ஏற்றுக்கொண்டிருக்கிறது. 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ராமதாஸ் வாங்கி கொடுத்திருக்கிறார் என்றும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிள்ளைகளை படிக்க வையுங்கள் என்றும், வேலைக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் துண்டு பிரசுரங்கள் வன்னியர் வீடுகளில் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற ராமதாசின் அடுத்த இலக்கை அடைவதற்கு தொண்டர்கள் உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ‘ஆன்லைன்’ வழியாக ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர்.

Next Story