திருச்செந்தூர் கோவில் வளாகம் வெறிச்சோடியது; பக்தர்கள் சாலைமறியலால் பரபரப்பு


திருச்செந்தூர் கோவில் வளாகம் வெறிச்சோடியது; பக்தர்கள் சாலைமறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Aug 2021 9:27 PM IST (Updated: 1 Aug 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

பக்தர்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டதால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம் வெறிச்சோடியது. மேலும் பக்தர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்துக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் இன்றி கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பக்தர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சுப்பிரமணிய சுவாமி கோவில்

தமிழகத்தில் கொரோனா பரவல் 2-ம் அலை குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டதால், கோவில் கடற்கரை, நாழிக்கிணறு பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
பல மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருந்தது. வார விடுமுறை நாட்களிலும், செவ்வாய், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் குவிந்தனர்

இந்த நிலையில் கொரோனா பரவல் 3-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் வழிபட பக்தர்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் நேற்று முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரையிலும், வருகிற 8-ந்தேதியும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இன்று ஆடிக்கிருத்திகையும், நாளை ஆடிப்பெருக்கும் கொண்டாடப்படுவதாலும், வார விடுமுறை தினம் என்பதாலும், திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெரும்பாலானவர்கள் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், பல்வேறு வாகனங்களிலும் கோவிலுக்கு வந்தனர்.

சாலைமறியல்

திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக வந்த பக்தர்களை அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் உள்ள மெயின் ஆர்ச் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பக்தர்கள், கோபுரத்தை தரிசனம் செய்வதற்காக மட்டுமேனும் அனுமதிக்குமாறு கூறினர். இதற்கு போலீசார் அனுமதிக்காததால், பக்தர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சில பக்தர்கள், கோவில் டோல்கேட் அருகில் நின்று கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

வெறிச்சோடியது

பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், திருச்செந்தூர் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடியது. கோவிலுக்கு பக்தர்கள் செல்லாதவாறு ஆங்காங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

Next Story