ஒரு வாரமாக நிரம்பி வழியும் வைகை அணை
தொடர் நீர்வரத்து எதிரொலியாக, முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை கடந்த ஒருவாரமாக நிரம்பி வழிகிறது.
ஆண்டிப்பட்டி:
தொடர் நீர்வரத்து எதிரொலியாக, முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை கடந்த ஒருவாரமாக நிரம்பி வழிகிறது.
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. வைகை அணை கட்டப்பட்ட ஆண்டு முதல், 30-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது. மேலும் வைகை அணையில் இருந்து தற்போது பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நிரம்பி வழிகிறது
இருப்பினும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவிலேயே நீடிக்கிறது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாத நிலையிலும், அணைக்கான நீர்வரத்து கணிசமாக உள்ளது. இதனால் வைகை அணை, கடந்த ஒரு வாரமாக நிரம்பி வழிகிறது.
தற்போது நீர்தேக்க பகுதியில் சுமார் 10 சதுர கிலோ மீட்டர் தூரம் தண்ணீர் தேங்கியுள்ளதால் வைகை அணை கடல் போல் காட்சியளிக்கிறது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று வீசி வருவதால், அணையின் கரை பகுதியில் அலைகள் ஏற்பட்டு வருகிறது.
அணைக்கு வினாடிக்கு 1,550 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story