பாப்பாரப்பட்டியில் ரூ.1½ கோடியில் பாரத மாதா நினைவாலயம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்
பாப்பாரப்பட்டியில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாரத மாதா நினைவாலயத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டியில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாரத மாதா நினைவாலயத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
பாரத மாதா நினைவாலயம்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிட வளாகத்தில் தமிழக அரசு செய்தித்துறை சார்பில் பாரதமாதா சிலையுடன் கூடிய பாரதமாதா நினைவாலயம், நூலகம் மற்றும் சுகாதார வளாகம் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். செய்தித்துறை இயக்குனர் வீ.பி.ஜெயசீலன் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.என்.பி.இன்பசேகரன், தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பாரத மாதா நினைவாலயத்தை திறந்து வைத்து பாரத மாதா சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இந்த வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடுதல் வசதிகள்
தமிழகத்தை சேர்ந்த முக்கிய சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரான மறைந்த சுப்பிரமணிய சிவாவின் நீண்ட கால கனவை நிறைவேற்றும் வகையில் பாரத மாதா ஆலயம் கட்ட கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பாரத மாதா ஆலயம், பாரதமாதா சிலை, நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்- அமைச்சர் உத்தரவுபடி தற்போது இங்கு பாரத மாத ஆலயம் மற்றும் சிலை திறப்பு விழா நடைபெற்று உள்ளது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் சிறப்பை போற்றும் வகையில் இங்கு பாரத மாதா நினைவாலயம் அமைக்கப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு இங்குள்ள சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி மணி மண்டபம் அமைத்தார். தற்போது பாரத மாதா நினைவாலயம் அமைக்கப்பட்டு உள்ள இந்த வளாகத்தில் தேவையான கூடுதல் வசதிகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், நினைவகங்கள் உதவி இயக்குனர் கலைச்செல்வன், முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி சேது முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன், பேரூராட்சி உதவி இயக்குனர் குருராஜன், செயல் அலுவலர் விஜய்சங்கர், தாசில்தார் பாலமுருகன், தி.மு.க. நிர்வாகிகள் தர்மசெல்வன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நினைவகங்கள் இணை இயக்குனர் அன்புசோழன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story