3-வது அலை வராமல் தடுக்க கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


3-வது அலை வராமல் தடுக்க கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Aug 2021 9:53 PM IST (Updated: 1 Aug 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

3-வது அலை வராமல் தடுக்க கொரோனா நோய்த்தொற்று விழிப்புணர்வு குறித்த தொடர் பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரோனா 2-வது அலையில் தீவிரமாக இருந்த பாதிப்பின் எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் குறைத்து இருக்கிறது.

கொரோனா 3-வது அலை தொடர்பான தகவல் வேகமாக பரவி வரும் நிலையில், அதனை தடுப்பதற்கான அடுத்தக்கட்ட ஆயத்த பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தற்போது களத்தில் மிக தீவிரமாக இறங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கொரோனா 3-வது அலை வராமல் தடுக்கவும், பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.

உறுதிமொழி

இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முககவசம் வடிவில் நின்றிருந்த நர்சுகளுடன் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அதனைத் தொடர்ந்து கொரோனா 3-வது அலையை தடுப்பதற்கு உறுதிமொழியை வாசித்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், நர்சுகள் உறுதிமொழியை சொன்னார்கள்.

பின்னர், முககவசம் அணிவதை பிரபலப்படுத்தும் வகையில் ‘மாஸ்க்அப் தமிழ்நாடு' என்ற பெயரில் ஹேஷ்டேக்கையும், விழிப்புணர்வு ‘பேட்ஜை’யும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அதனையடுத்து, அதே வளாகத்தில் ‘கொரோனாவை வெல்லும் தமிழ்நாடு' என்ற பெயரில் சிறப்பு கண்காட்சியை வெளியிட்டதோடு, கொரோனா விழிப்புணர்வு குறித்த குறும்படத்துக்கான குறுந்தகடையும் வெளியிட்டார்.

மேலும் பொது மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எல்.இ.டி. பொருத்தப்பட்ட வாகன பிரசாரத்தையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கலைவாணர் அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள இந்த விழிப்புணர்வு கண்காட்சியை பொதுமக்கள் வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தவித கட்டணமுமின்றி பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரும்போது முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

விழிப்புணர்வு

இதனைத்தொடர்ந்து ஒரு வார காலத்துக்கு தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர்கள் ஒருங்கிணைந்து நடத்திட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக கடைவீதிகள், ரெயில் நிலையம், பஸ்நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், துண்டு பிரசுரங்கள், சிற்றேடுகள், டுவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சி நேர்காணலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Next Story