திருவோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு


திருவோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Aug 2021 10:00 PM IST (Updated: 1 Aug 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

திருவோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை- பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சின்னமங்குடி கிராமத்தைச்சேர்ந்தவர் குழந்தைசாமி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது30). இவர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார் புஷ்பவள்ளி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சரண்யா மற்றும் புஷ்பவள்ளி ஆகிய இருவரும் குழந்தைகளுடன் வீட்டின் முன்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், திருவோணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சேகர் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story