கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி கலெக்டர் பிரசாரம்


கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி கலெக்டர் பிரசாரம்
x
தினத்தந்தி 1 Aug 2021 10:02 PM IST (Updated: 1 Aug 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளதால், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய கலெக்டர் சமீரன் பிரசாரம் செய்தார்.

கோவை

கோவையில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளதால், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய  கலெக்டர் சமீரன் பிரசாரம் செய்தார்.

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு 

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி காந்திபுரம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. 

அப்போது கொரோனாவை சித்தரிக்கும் வகையில் காற்று நிரப்பப் பட்ட பொம்மைகளை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

அந்த பொம்மைக்குள் இருந்த மனிதர்கள் பஸ் நிலையத்தில் இருந்தவர் களின் அருகே நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதை பார்த்து குழந்தைகள் குதூகலம் அடைந்தனர்.

உறுதிமொழி

இதைத் தொடர்ந்து அங்கிருந்த பயணிகள் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

பின்னர் அவர், பஸ் நிலையத்தில் உள்ள கடை வியாபாரிகள், பொதுமக்கள், பஸ்சில் இருந்த பயணிகளிடம் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார். 

இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:- 
தமிழக முதல் -அமைச்சரின் அறிவிப்பின் படி ஒரு வாரத்திற்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது. 

குறும்படம் மற்றும் ஓவியம், வசன போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் விருது வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதால் பூங்காக்களை மூடுதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

இறைச்சிக் கடைகள் மூடல்

பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக் கப்படுகிறது.
 
ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட வேண்டும். குறிப்பாக இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

வாளையாறு உள்பட மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். கேரளாவில் இருந்து வருபவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே காந்திபுரம் பஸ் நிலையத்தில் முக கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.


Next Story