மூதாட்டியிடம் தாலியை திருடிய பெண் கைது
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூதாட்டியிடம் தாலியை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். நகையை பறிக்கொடுத்த அதிர்ச்சியில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூதாட்டியிடம் தாலியை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். நகையை பறிகொடுத்த அதிர்ச்சியில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
மூதாட்டியிடம் தாலி திருட்டு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பன்னாள் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ெஜகதீசன்(70). இவருடைய மனைவி நாகலட்சுமி (வயது68). இவர் உடல்நலக்குறைவால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதைப்போல பண்ணிநேர் மொழியால்புறம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி பிரியதர்ஷினி (32) என்பவரும் எறும்பு மருந்து தின்று விட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாகலட்சுமிக்கு பக்கத்தில் உள்ள படுக்கையில் பிரியதர்ஷினி சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று இரவு நாகலட்சுமி அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது அவரது கழுத்தில் கிடந்த தாலி கயிற்றை பிரியதர்ஷினி அறுத்து இதில் இருந்த தங்க தாலி, குண்டுகளையும் திருடி மறைத்து வைத்துள்ளார்.
பெண் கைது
நாகலட்சுமி தான் கழுத்தில் கடந்த தாலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நாகலட்சுமி கணவர் ஜெகதீசன் வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிரியதர்ஷினி தான் திருடிய தாலி மற்றும் குண்டுகளை ஒரு அடகு கடையில் விற்பனை செய்ய சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரியதர்ஷினியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகலட்சுமியிடம் இருந்து தாலி மற்றும் குண்டுகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து பிரியதர்ஷினியை கைது செய்து அவரிடம் இருந்து தாலி மற்றும் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிர்ச்சியில் சாவு
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நாகலட்சுமி தாலி திருட்டு போன அதிர்ச்சியில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். தாலி திருட்டுப்போன அதிர்ச்சியில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story