ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஊட்டி
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஹெல்மெட் கட்டாயம்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகரம், ஊட்டி ஊரகம், குன்னூர், கூடலூர், தேவாலா ஆகிய 5 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இங்கு கடந்த 3 ஆண்டுகளில் இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்தது.
இதற்கு காரணம், அதில் பயணித்தவர்கள் ஹெல்மெட் அணியாததே என்பது தெரியவந்தது.
இதை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும், அவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதிமுறை நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தலா ரூ.100 அபராதம்
இந்த நிலையில் ஊட்டியில் உள்ள சேரிங்கிராஸ் சந்திப்பில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீசார் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் ஹெல்மெட் அணிந்து உள்ளார்களா என்று சோதனை நடத்தினர்.
அதில் சில இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருந்தவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்ததை கண்டறிந்து, தலா ரூ.100 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் சரியான முறையில் அணிந்து இருக்கிறார்களா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஹெல்மெட் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் இருப்பதோடு, சரியான முறையில் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
போலீசாரும் பின்பற்ற வேண்டும்
நேற்று விடுமுறை தினம் என்பதால் பிற மாவட்டங்களில் இருந்து அதிகம் பேர் இருசக்கர வாகனங்களில் ஊட்டிக்கு வந்தனர். அப்போது ஊட்டி நகரில் ஹெல்மெட் அணியாமல் வந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு போலீசார் அதிரடியாக அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த விதிமுறையை காவல்துறை மற்றும் பிற அரசு ஊழியர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஹெல்மெட் அணியாமல் சென்றால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சோதனை வருகிற 6-ந் தேதி முதல் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றனர்.
Related Tags :
Next Story