புதிய தொழில்நுட்பத்தில் அப்பர்பவானி அணை சீரமைப்பு
தண்ணீர் கசிவை தடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அப்பர்பவானி அணை சீரமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
தண்ணீர் கசிவை தடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அப்பர்பவானி அணை சீரமைக்கப்பட்டு உள்ளது.
தண்ணீர் கசிவு
மஞ்சூர் அருகே அப்பர்பவானி அணை உள்ளது. இந்த அணை 210 அடி கொள்ளளவு கொண்டது. இது நீலகிரியிலேயே பெரிய அணை ஆகும். கடல்மட்டத்தில் இருந்து 7,470 அடி உயரத்தில் உள்ளது. குந்தா நீர்மின் திட்டத்தின் கீழ் அப்பர்பவானி அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அவலாஞ்சி, கெத்தை, குந்தா, பரளி, பில்லூர் ஆகிய மின் நிலையங்களுக்கு சுரங்க பாதைகள் மூலம் பெரிய குழாய்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதற்கிடையே அந்த அணையை கட்டி 50 ஆண்டுகள் கடந்ததால், சில இடங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் நிமிடத்துக்கு 8,600 லிட்டர் தண்ணீர் வீணாகுவது தெரியவந்தது. இதை தடுக்கவும், அணையை சீரமைக்கவும் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் உலக வங்கியின் நிதி பெறப்பட்டு, அணையை சீரமைக்கும் பணி தொடங்கியது.
நீர்மட்டம் உயர்வு
இதற்காக அணையில் இருந்து தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் செயல்படும் ஒரு நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பத்தின் உதவியோடு அணையின் உள்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரோடு ‘ஜியோ மெம்மரீன் சீட்’ பொருத்தப்பட்டது. இருபுறமும் சீரமைப்பு பணிகள் முடிந்து, சமீபத்தில் பணி நிறைவடைந்தது.
இதையடுத்து ஷட்டர்கள் கீழே இறக்கப்பட்டு, அணையில் மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அப்பர்பவானி அணையில் முடிந்த சீரமைப்பு பணிகளை சென்னை மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் மின் உற்பத்தி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story