கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த அலைமோதிய பொதுமக்கள்
கிணத்துக்கடவு பகுதியில் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. முதல் தவணை தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கோவேக்சின் தடுப்பூசி
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 2-வது அலையில் மாநகர பகுதியைவிட, கிராம புறங்களில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் கிராம பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி செலுத்தி வந்தனர்.
இதன்படி கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் கோவிஷீல்டு முதல் தவணை செலுத்தி 84 நாட்கள் முதல் 111 நாட்கள் வரை 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். கோவேக்சின் முதல் தவணை செலுத்திய 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை செலுத்த வேண்டும்.
2-வது தவணை செலுத்த அலைமோதிய பொதுமக்கள்
கிணத்துக்கடவில் முதலில் குறைந்த அளவிலான கோவேக்சின் தடுப்பூசி வந்தது. பின்னர் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வந்தது. இதனால் கிணத்துக்கடவு பகுதியில் கோவேக்சின் போட்டவர்கள் 50 நாட்களுக்கு மேல் ஆகியும், 2-வது தவணை செலுத்த முடியாமல் அவதியடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் தடுப்பூசி போடப்படும் என தகவல் வெளியானது.
இதையடுத்து 2-வது தவணை தடுப்பூசிக்காக காத்திருந்தவர்கள் அதிகாலை முதலே ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு குவிந்தனர். பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால், அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. டோக்கனை பெற்றவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி சென்றனர். இதில் மொத்தம் 420 பேருக்கு 2-வது தவணையாக கோவேக்சின் தடுப்பூசி போடப்படடது.
ஏமாற்றம்
இதற்கிடையில், தடுப்பூசி போடுவதை அறிந்த பொதுமக்கள் சிலர் முதல் தவணை தடுப்பூசி போட வந்தனர். அப்போது அங்கிருந்த சுகாதாரத்துறையினர் 2-வது தவணையாக மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று தெரிவித்தனர். இதனால் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தடுப்பூசி போடும் முகாம்களை கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, நல்லட்டிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா, சமீதா, பிரபு உள்பட அதிகாரிகள் கண்காணித்தனர்.
Related Tags :
Next Story