தடையை மீறி தாமிரபரணி ஆற்றில் குளிக்க திரண்ட பொதுமக்கள்
நெல்லையில் தடையை மீறி தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க திரண்டனர். பாபநாசம் படித்துறை வெறிச்சோடியது.
நெல்லை:
நெல்லையில் தடையை மீறி தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க திரண்டனர். பாபநாசம் படித்துறை வெறிச்சோடியது.
குளிக்க தடை
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவுவதை தடுப்பதற்காக நெல்லை மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி வரை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கும், ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த தடை உத்தரவை மீறி தாமிரபரணி ஆற்றில் வழக்கம்போல் பொதுமக்கள் குளித்து செல்கிறார்கள். மேலும் பாபநாசம், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. பாபநாசத்தில் நேற்று முன்தினம் இறந்த தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
மக்கள் குவிந்தனர்
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் துணி துவைத்து குளித்து சென்றனர். இதேபோல் நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் பகுதியில் நேற்று குளிக்க வந்தவர்களை போலீசார் அங்கிருந்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பாபநாசம்
இதேபோல் பாபநாசத்தில் நேற்று காலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேரிகார்டு வைத்து சாலையை அடைத்தனர். அங்கு வந்த பக்தர்களை போலீசார் சாமி கும்பிட, குளிக்க அனுமதி இல்லை என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனால் பாபநாசம் கோவில் முன்பு உள்ள படித்துறை மற்றும் பாபநாசம் கோவில், பாபநாசம் வனத்துறை சோதனைச் சாவடி ஆகியவற்றில் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடியது.
Related Tags :
Next Story