புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இன்று முடிவு


புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இன்று முடிவு
x
தினத்தந்தி 2 Aug 2021 12:35 AM IST (Updated: 2 Aug 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இன்று (திங்கட்கிழமை) முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் நமச் சிவாயம் கூறினார்.

புதுச்சேரி, ஆக.2-
புதுச்சேரியில்  பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இன்று (திங்கட்கிழமை) முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் நமச் சிவாயம் கூறினார்.
பள்ளிகள் திறப்பு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா 2-வது அலையின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதை தொடர்ந்து   கடந்த மாதம் 16-ந் தேதி முதல் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இன்று முடிவு
இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர்  நமச் சிவாயம் அறிவித்தார். இதற்கிடையே    தற்போது கொரோனா      பாதிப்பு 100-க்கும் கீழ் வந்துள்ளது. எனவே பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து நாளை (அதாவது இன்று) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். புதுவையில் இந்த மாதம் 15-ந் தேதிக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம். வகுப்பறைகள் நீண்ட காலமாக மூடிக்கிடக்கின்றன. எனவே அவற்றை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும். 
போலீஸ்காரர்களுக்கு விடுப்பு
மாணவர்கள் பாடம் கற்பதற்கு ஏற்ற வகையில் வகுப்பறைகளை உருவாக்க வேண்டும். பள்ளிகளை திறக்கும்போது வகுப்புகளை எவ்வாறு நடத்துவது, பின்பற்ற வேண்டிய கொரோனா விதிமுறைகள், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகத்தை எப்போது தொடங்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் தற்போது அது போன்ற எண்ணம் இல்லை. இதுதொடர்பாக முதல்-அமைச்சர், காவல்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
_____

Next Story