திருக்குறுங்குடி மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம்
திருக்குறுங்குடி மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி மலை பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
யானைகள் நடமாட்டம்
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு நேற்று காலையில் வழக்கம்போல் பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து சென்றனர். அங்குள்ள வனத்துறை சோதனைச்சாவடியைக் கடந்து 2-ம் பாலம் அருகில் சென்றபோது, அங்கு கூட்டமாக வந்த யானைகள் மலைப்பாதையில் உள்ள மரக்கிளைகளை முறித்து சாப்பிட்டவாறு சென்றன.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், கோவிலுக்கு செல்லாமல் தலைதெறிக்க ஓடி திரும்பி வந்து, சோதனைச்சாவடியில் உள்ள வனத்துறையினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
வனத்துறையினர் கண்காணிப்பு
தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின்பேரில், வனச்சரகர் பாலாஜி தலைமையில் வனத்துறை ஊழியர்கள் திருமலைநம்பி கோவில் மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் திருக்குறுங்குடி வனச்சரகம் ஆனைகால்விளை, மாவடிமொட்டை வனப்பகுதியில் காட்டு தீ எரிந்து வருகிறது. எனவே அங்கு கடும் வெப்பம் நிலவுவதால், யானைகள் இடம் பெயர்ந்து திருமலைநம்பி கோவில் பாதைக்கு வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story