ஒருவழிப்பாதையில் செல்லாத அரசுத்துறை வாகனங்கள்


ஒருவழிப்பாதையில் செல்லாத அரசுத்துறை வாகனங்கள்
x
தினத்தந்தி 2 Aug 2021 1:12 AM IST (Updated: 2 Aug 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் ரெயில்வே மேம்பால பணிகளுக்காக ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசுத்துறை வாகனங்கள் மட்டும் அதனை மதிக்காமல் செல்வதால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் தினமும் தகராறு ஏற்பட்டு வருகிறது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் ரெயில்வே மேம்பால பணிகளுக்காக ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசுத்துறை வாகனங்கள் மட்டும் அதனை மதிக்காமல் செல்வதால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் தினமும் தகராறு ஏற்பட்டு வருகிறது.
புதிய மேம்பாலம்

ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரெயில் நிலையம் அருகில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரெயில்வே கேட் மூடப்படும்போது ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை போக்க ரெயில்வே கேட் பகுதியில் புதிய சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.30.74 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாலமானது, மொத்தம் 675.56 மீட்டர் நீளத்திலும், 11 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட உள்ளது.
அதேபோல, பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் அமைக்கப்பட உள்ளது.இந்த பால பணிகளுக்காக மேற்கண்ட வழித்தடத்தில் மாற்று சாலை அமைக்கப்பட்டு அதில் ஒரு வழிப்பாதை திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.இதன்படி ரெயில்நிலைய பகுதியில் இருந்து பாலத்தின் மாற்று சாலையில் குமரையா கோவில் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுஉள்ளது. 
ஒருவழிப்பாதை
இதுதவிர, கீழக்கரை பகுதியில் இருந்து வருபவர்கள் ரெயில்வே பாலத்தின் வழியாக ரெயில்நிலைய பகுதிக்கு செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளது. இதற்காக பாலத்தின் அடியில் 2 சாலைகள் தற்காலிகமாக போடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் குமரையா கோவில் பகுதியில் இருந்து ரெயில்நிலைய பகுதி வழியாக பாலம் கட்டும் நடைபெறும் பகுதியை கடந்து செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. குமரையா கோவில் பகுதி முதல் பழைய பஸ்நிலையம் வரையிலான பகுதி ஒருவழிப்பாதையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. 
இந்த வழியாக செல்லாமல் குமரையா கோவில் பகுதியில் இருந்து சின்னக்கடை வழியாக புதிய பஸ்நிலையம் சென்று அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லுமாறு வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. 2 சக்கர வாகனங்கள் தவிர பொதுமக்களின் அனைத்து வாகனங்களும் இந்த ஒருவழிப்பாதை திட்டத்தினை மதித்து இதுநாள் வரை சென்று வருகின்றனர்.
இதற்காக குமரையா கோவில் பகுதியில் போக்குவரத்து போலீசார் நிறுத்திவைக்கப்பட்டு வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இந்த ஒருவழிப்பாதையில் அரசுத்துறை வாகனங்கள் மதித்து செல்லாமல் அரசு வாகனம் என்று கூறிக்கொண்டு பாலம் நடைபெறும் பாதை வழியாக சர்வ சாதாரணமாக சென்று வருகின்றனர்.இதுகுறித்து போக்குவரத்து போலீசார் எடுத்துக்கூறியும் அரசு வாகன டிரைவர்கள் கேட்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 
கோரிக்கை

இவ்வாறு அரசு வாகனங்கள் மட்டும் ஒருவழிப்பாதையில் சர்வ சாதாரணமாக செல்வதால் அதனை காணும் பொதுமக்கள் போலீசாருடன் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் குமரையா கோவில் பகுதி விலக்கு ரோட்டில் போலீசாருடன் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதி அடிக்கடி பரபரப்பு மிக்க பகுதியாக மாறி வருகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் இதுகுறித்து அரசுத்துறை வாகனங்களுக்கு தெளிவான உத்தரவிட்டு ஒருவழிப்பாதையை மதித்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story