மொபட் மீது கார் மோதி தீப்பற்றி எரிந்தன; விவசாயி சாவு


மொபட் மீது கார் மோதி தீப்பற்றி எரிந்தன; விவசாயி சாவு
x
தினத்தந்தி 1 Aug 2021 7:44 PM GMT (Updated: 1 Aug 2021 7:44 PM GMT)

மொபட் மீது கார் மோதியதில் 2 வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

பாடாலூர்:

பேரக்குழந்தைகளுடன் வந்தார்
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 57). விவசாயி. இவரது மகளை, தெரணி கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். நேற்று காலை தனது மகள் வீட்டிற்கு சென்ற பெரியசாமி, மதிய நேரத்தில் ஒரு மொபட்டில், தனது மகளின் குழந்தைகளான அஜய் (5), பரணி (2) ஆகியோரை அழைத்துக்கொண்டு லாடபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த புனிதன்(57), அவருடைய மனைவி ஷீலாவுடன்(50) காரில் திருச்சி நோக்கி வந்தார். புனிதன் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். காரை டிரைவர் இளம்பருதி(50) ஓட்டினார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரூரில் உள்ள காரை பிரிவு சாலை எதிரே வந்தபோது எதிர்பாராதவிதமாக மொபட் மீது கார் மோதியது.
தீப்பற்றி எரிந்தன
இதில் மொபட் காரின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்டது. இதில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென்று மொபட்டும், அதைத்தொடர்ந்து காரும் தீப்பற்றி எரிந்தன. இதில் பெரியசாமியும், அவரது பேரக்குழந்தைகள் 2 பேரும் தீக்காயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்களும், நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாரும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
காரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளும் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கார் தீப்பிடித்ததும், புனிதன், ஷீலா மற்றும் இளம்பருதி ஆகியோர் காரில் இருந்து இறங்கி விலகிச்சென்றதால், அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். ஆனால் காரில் இருந்த நில ஆவணம், சுமார் ரூ.1½ லட்சம், 2 செல்போன்கள், ஒரு ஜோடி தங்கக்கொலுசு ஆகியவை எரிந்து நாசமாகின.
போலீசார் விசாரணை
மேலும் மொபட் மற்றும் கார் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், அப்பகுதி மக்கள் அருகில் உள்ள கடைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story