கர்நாடகத்தில் 466 கிராமங்களில் வெள்ள பாதிப்பு; வீடுகளை இழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் மழை-வெள்ளத்தால் 466 கிராமங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வீடுகளை இழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளாா்.
பெங்களூரு:
கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கர்நாடகத்தில் தொடர்ச்சியாக கடந்த 3 ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை வரலாறு காணாத அளவில் பெய்து வருகிறது. கடந்த 2019-, 2020-ம் ஆண்டுகளில் கடலோர கர்நாடகம் மற்றும் வட கர்நாடகத்தில் கனமழை பெய்து அதிகளவில் வெள்ள சேதங்கள் ஏற்பட்டன. அதிக எண்ணிக்கையில் உயிர் சேதங்களும், பொருட்சேதங்களும் உண்டாகின. முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
அதே போல் நடப்பு ஆண்டில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடலோட கர்நாடகம், மலைநாடு மாவட்டங்கள் மற்றும் வட கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அண்டை மாநிலமான மராட்டியத்தில் தீவிரமான மழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் கொய்னா உள்ளிட்ட அணைகளில் இருந்து நீர் அதிகளவில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதனை ஒட்டியுள்ள பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மல்லபிரபா, கட்டபிரபா ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் ஆற்றங்கரையோர கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன.
ஆலோசனை நடத்தினார்
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வெள்ள சேதங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது. சில பகுதிகளில் தற்போது மழை நின்றுள்ளது. குறிப்பாக கிருஷ்ணா ஆற்று படுகை, உத்தரகன்னடா, பெலகாவி, உடுப்பி உள்பட 13 மாவட்டங்களில் வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மழை-வெள்ளத்தில் சிக்கி 13 பேர் இறந்துள்ளனர். ஒருவர் மாயமாகி உள்ளார். 466 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன.
விவசாய பயிர்கள் சேதம்
சேதம் அடைந்த சாலைகள், பாலங்களை சீரமைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மொத்தம் ரூ.510 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. தண்ணீர் வடிந்த உடனேயே சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.150 கோடி செலவு செய்ய முடிவு செய்துள்ளோம். மொத்தம் ரூ.660 கோடி நிதி சாலை சீரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
சேதம் அடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவி வழங்கப்படும். வீடுகள் முழுமையாக சேதம் அடைந்திருந்தால், அதற்கு தலா ரூ.5 லட்சமும், வீடுகள் பாதி சேதம் அடைந்திருந்தால் ரூ.3 லட்சமும், பாதிப்பு குறைவாக இருந்தால் அதற்கு ரூ.50 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி, விவசாய பயிர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்புமாறு கேட்டுள்ளேன்.
மந்திரிசபை விரிவாக்கம்
வெள்ளம் ஏற்பட்டு இருப்பதால், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சித்தராமையா குறை கூறுவது சரியல்ல. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது அவருக்கு தெரியும். அதனால் அவரது விமர்சனம் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. மந்திரிசபை விரிவாக்கத்திற்கு 2 நாட்களில் அனுமதி கிடைக்கும். அதன் பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும்.
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் தொடர்பாக அதன் நிர்வாகிகளிடம் பேசினேன். இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்ப்போம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
கிருஷ்ணா ஆற்றில் 4½ லட்சம் கனஅடி நீர் திறப்பு
மராட்டிய மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று காலை வினாடிக்கு 4½ லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பெலகாவி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் உள்ள 45 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும் ராய்ச்சூர், பாகல்கோட்டை மாவட்டங்களிலும் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் 3 மாவட்ட மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கி போய் உள்ளது.
Related Tags :
Next Story