வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார்.
ஆய்வு கூட்டம்
குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திட்ட வரைபடம்
பொதுப்பணித்துறையினர் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை மறுசீரமைக்கும் பணியில் விரைந்து திட்ட வரைபடம் தயாரித்து, பணிகளை முடிக்க வேண்டும். துறைமுகம் அமைக்கும் பணிகளை பொறுத்த வரையில் மீன்வளத்துறையினருடன் பொதுப்பணித்துறை (நீர்வளம்) இணைந்து பணியாற்ற வேண்டும்.
இத்திட்டம் குறித்து சென்னை ஐ.ஐ.டி. பேராசியருடன் நான் ஏற்கனவே ஆலோசனை நடத்தினேன். எனவே அனைவரும் ஒன்றிணைந்து பணிகள் மேற்கொண்டு திட்டத்தினை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்.
சாலைகள்
நெடுஞ்சாலைத்துறையினர் மாவட்டத்தில் பழுதடைந்துள்ள சாலைகளை அடுத்த ஒரு மாதத்திற்குள் சீரமைக்க வேண்டும். முழுமையடையாமல் உள்ள சாலைப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையினர் தங்களிடம் பயன்பாட்டில் இல்லாத பழைய பஸ்களை உடனடியாக கழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பஸ்களை சரிவர இயக்க முடியாத நிலையில் உள்ளவற்றை கணக்கெடுத்து சமர்ப்பிக்க வேண்டும். தேவையான வழித்தடங்களில் காலதாமதமின்றி பஸ்களை இயக்க வேண்டும்.
நடவடிக்கை
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகள் தரமான பொருட்களை கொண்டு கட்டப்பட வேண்டும். வீடுகள் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது நடைபெற்று வரும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வீடுகளை விரைவாக கட்டி முடித்து தகுதியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிப்பது அவசியம். அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், அரசின் சலுகைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவா் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வன அதிகாரி அசோக் குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வீராசாமி (பொது), பத்ஹூ முகமது நசீர் (வளர்ச்சி) உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story