நாகராஜா கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்


நாகராஜா கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 2 Aug 2021 2:52 AM IST (Updated: 2 Aug 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் வழிபாடு நடத்த 3 நாள் தடை விதித்ததால், நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்். பால் பாக்கெட்டை நுழைவு வாயிலில் வைத்து சென்றனர்.

நாகர்கோவில்:
கோவில்களில் வழிபாடு நடத்த 3 நாள் தடை விதித்ததால், நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்். பால் பாக்கெட்டை நுழைவு வாயிலில் வைத்து சென்றனர்.
கோவில்கள் மூடல்
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனினும் கொரோனா நோய்த்தொற்று பரவல் தற்போது பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே தமிழகம் முழுவதும் நேற்று முதல் மூன்று நாட்கள் முக்கிய கோவில்களை மூட அரசு உத்தரவிட்டது.
குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் பொதுமக்கள் ஆடி அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும், குழித்துறை தாமிரபரணி ஆற்று படுகைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆடி மாதத்தை முன்னிட்டு தொடர்ந்து விசேஷ நாட்களாக வருவதால் கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு நேற்று முதல் மூன்று நாட்கள் பொதுமக்கள் ஆலயங்களில் வழிபடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
பக்தர்கள் ஏமாற்றம்
அதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் நேற்று கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதே போல நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். ஆனால் நாகராஜா கோவில் மூடப்பட்டு இருந்தது.
மேலும் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ‘பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை’ என்று எழுதப்பட்டு இருந்த அட்டை தொங்கவிடப்பட்டு இருந்தது. இதனால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குடும்பம் குடும்பமாக வந்திருந்த பக்தர்கள் கோவில் நுழைவு வாயில் முன் நின்றபடி சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
வழக்கமான பூஜைகள்
நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு ஆண்களும், பெண்களும் பால் ஊற்றி, மஞ்சள் தூவி வழிபடுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றவும், மஞ்சள் தூவவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் இது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் பால் பாக்கெட் மற்றும் மஞ்சள் பொடி பாக்கெட்டுகளை வாங்கி வந்திருந்தனர்.
கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், பக்தர்கள் வாங்கி வந்த பால் பாக்கெட்டுகள் மற்றும் மஞ்சள் பொடி பாக்கெட்டுகளை நுழைவு வாயிலிலேயே வைத்துவிட்டு சென்றனர். முன்னதாக கோவிலில் வழக்கமான பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.

Next Story