கூவம் நதிக்கரை ஓரம் குடியிருப்புகளை அகற்றிவிட்டு அந்த இடத்தை யாருக்கு கொடுக்க போகிறார்கள்? சீமான் கேள்வி
சென்னை அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கூவம் நதிக் கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள குடியிருப்புகளை கடந்த சில தினங்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து அகற்றிவிட்டு அங்கிருந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கி அனுப்பி வைத்து வருகின்றனர். ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வீடுகளை காலி செய்ய மறுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அந்த இடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசு இடையே மாறுபாடு இல்லை. ஆதிகுடி நிலையை தமிழகத்தின் தலைநகரில் இருந்து அப்புறப்படுத்துவதில் இரண்டு கட்சிகளும் குறியாக உள்ளது. கூவம் நதிக்கரையில்தான் எங்களது ஆதிகுடி இருக்கிறது. ஒவ்வொரு குடும்பமாக அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களுக்கு இடப்பெயர்வு செய்யப்பட்டு உள்ளனர். யாருக்கும் முன்னறிவிப்பு இல்லாமல் காலி செய்துள்ளதாக கூறுகின்றனர்.ஆக்கிரமிப்பு செய்யும்போது மின் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டைகள் எல்லாம் எப்படி கொடுக்கப்பட்டது?. எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு இந்த இடத்தை யாருக்கு கொடுக்கப்போகிறார்கள்?. இந்த இடத்தில் என்ன நடக்கும்?. இவர்கள் குடியிருந்தால் அரசுக்கு என்ன இடையூறு?. தமிழகத்தின் தலைநகரில் தமிழர்கள் வாழக்கூடாது. அதைத்தவிர இதில் வேறு நோக்கம் இல்லை. மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜ.க. நடத்தும் நாடகத்தை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story