சுதந்திர தினவிழா பாதுகாப்பை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பார்வையாளா்களுக்கு தடை


சுதந்திர தினவிழா பாதுகாப்பை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பார்வையாளா்களுக்கு தடை
x
தினத்தந்தி 2 Aug 2021 10:33 AM IST (Updated: 2 Aug 2021 10:33 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின கொண்டாட்டங்களை சீா்குழைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், முக்கிய ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் வியாபார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே கொரோனா காரணமாக கடந்த ஓராண்டாக பார்வையாளர் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் முக்கிய பிரமுகர்கள், எம்.பி., மந்திரிகள் வந்தால் அவர்களை வரவேற்க சிறப்பு அனுமதி அளித்து பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 5 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார்.

இதையடுத்து ஜனாதிபதி வருகை மற்றும் சுதந்திர தினவிழாவையொட்டி விமான நிலையத்தில் பாா்வையாளா் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் கூடுதலாக 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. சிறப்பு அனுமதி பாஸ்கள் உள்பட அனைத்து விதமான பாஸ்களும் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

Next Story