ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 4 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்


ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 4 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 2 Aug 2021 4:21 PM IST (Updated: 2 Aug 2021 4:21 PM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 4 கார்கள், 3 மோட்டார்சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின. மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மேடவாக்கம் டாக்டர் விமலா நகர் 3-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் கவுதம் (வயது 32). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், வீட்டு வளாகத்துக்குள் அவருக்கு சொந்தமான 4 விலை உயர்ந்த கார்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று காலை கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதம், மேடவாக்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீட்டு வளாகத்தில் அருகருகே நிறுத்தி வைத்திருந்த 4 கார்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

பெட்ரோல் குண்டு வீச்சா?

இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மின்கசிவால் கார்கள் எரிந்தனவா? அல்லது யாராவது தீ வைத்துவிட்டு தப்பி ஓடினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து கண்டறிய வீட்டின் முன்பு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதிகாலையில் யாரோ 2 பேர் மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டின் அருகே வந்து செல்வது மட்டும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே தொழில் போட்டியில் யாராவது கவுதம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story