ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு


ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 2 Aug 2021 9:00 PM IST (Updated: 2 Aug 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

ஆடி கிருத்திகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

தர்மபுரி:
ஆடி கிருத்திகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
ஆடி கிருத்திகை
தர்மபுரியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று ஆடி கிருத்திகை நடைபெற்றது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை நாளில் முருகன் கோவில்களில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். 
ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் நேற்று நடந்த ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தங்க கவசம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு கோவில் வளாகத்துக்குள் சாமி சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் தண்ணீர் நிறைந்த கொப்பரையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.
இதேபோன்று தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத இஷ்ட சித்தி சண்முகநாதர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், எஸ்.வி. ரோடு சுப்பிரமணியசாமி கோவில், பாரதிபுரம் முருகன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story