பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை: ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது


பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை: ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 2 Aug 2021 9:37 PM IST (Updated: 2 Aug 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

தளி அருகே பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை:
பலாத்கார வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளியை அடுத்த பாளையங்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் வீரேந்திரன் (வயது 33). விவசாயி. இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 
இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் இந்த தண்டனையை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதனால் வீரேந்திரன் மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் அவர் பலாத்கார வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
தற்கொலை
இதனிடையே இவருக்கும், உறவினர்களுக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவும் அவர் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு வீரேந்திரன் ஜாமீனில் வெளியே வந்தார். ஆயுள் தண்டனை, சொத்து பிரச்சினை காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, வீரேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக வீரேந்திரனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
உருக்கமான கடிதம்
அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீரேந்திரன் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், அன்புள்ள அம்மா, 2 அக்கா, மாமா, மாமா மகள்களை நன்றாக பார்த்து கொள்ளவும். உங்களுக்கு எப்போதும் துணை இருப்பேன். இந்த சொத்தால் என் வாழ்க்கை, உயிர் போச்சு என்று அதில் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தளி அருகே ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story