வீடுகளை காலி செய்ய முயற்சி: தாசில்தார் அலுவலக வாசலில் விழுந்து பெண்கள் கதறல் திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு


வீடுகளை காலி செய்ய முயற்சி: தாசில்தார் அலுவலக வாசலில் விழுந்து பெண்கள் கதறல் திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Aug 2021 9:38 PM IST (Updated: 2 Aug 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில், வீடுகளை காலி செய்ய முயற்சி நடந்ததை தொடர்ந்து பெண்கள் தாசில்தார் அலுவலக வாசலில் விழுந்து வீடுகளை காலி செய்யக்கூடாது என முறையிட்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்துறைப்பூண்டி:-

திருத்துறைப்பூண்டியில், வீடுகளை காலி செய்ய முயற்சி நடந்ததை தொடர்ந்து பெண்கள் தாசில்தார் அலுவலக வாசலில் விழுந்து வீடுகளை காலி செய்யக்கூடாது என முறையிட்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. 

வீடுகளை காலி செய்ய முயற்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை ஊராட்சி கண்ணன் மேடு மேலத்தெருவில் 110-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் விவசாய கூலித்தொழிலாளர்கள். 
இந்த பகுதியில் ஒரு காலத்தில் குளம் இருந்ததாகவும், அதை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், இது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் என்பதால் வீடுகளை காலி செய்ய வேண்டும் என கூறி அந்த ஊரை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அந்த பகுதியில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை காலி செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி வீடுகளை காலி செய்ய அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

அலுவலக வாசலில் பெண்கள் கதறல்

இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் வையன்னா செந்தில் தலைமையில் அறப்போர் இயக்க தலைவர் அன்புமணி, பொறுப்பாளர்கள் அய்யப்பன், தமிழ்ச்செல்வன், விஜய், நக்கீரன் உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று வீடுகளை காலி செய்யக்கூடாது என முறையிட்டனர்.  
அப்போது பெண்கள் சிலர் தாசில்தார் அலுவலக வாசலில் கீழே விழுந்து கையேந்தி, ‘எங்கள் இடத்தை எங்களுக்கே கொடுத்து விடுங்கள். வீடுகளை காலி செய்ய வேண்டாம்’ என கூறி கதறி அழுதனர். அவர்களிடம் தாசில்தார், கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

குடிமைப்பட்டா வழங்க வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ‘நாங்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொருக்கை ஊராட்சி கண்ணன் மேடு மேலத்தெருவில் வசித்து வருகிறோம். இப்போது அரசு எங்களுடைய வீடுகளை காலி செய்ய கூறுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. குளம் இருந்ததாகவும், அரசு நிலத்தை நாங்கள் கையகப்படுத்தியதாகவும் கூறுவதிலும் நியாயமில்லை. 
ஆகையால் நாங்கள் வசிக்கும் பகுதியை மாவட்ட கலெக்டர் நேரடியாக பார்வையிட்டு உரிய ஆய்வுகளை மேற்கொண்டு குடிமைப்பட்டா வழங்கி அந்த இடத்திலேயே வசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர். 
தாசில்தார் அலுவலக வாசலில் பெண்கள் விழுந்து கதறி அழுததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story