தேனியில் கொரோனா பரவலை தடுக்க பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு
தேனியில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் விதமாக பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
தேனி:
கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் விதமாக பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
கொரோனா விழிப்புணர்வு
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஒரு வார கால கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் தொடங்கின. 2-வது நாளாக நேற்று தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கினார். அப்போது பஸ் நிலையத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் சிலரும், பொதுமக்கள் சிலரும் முக கவசம் அணியாமல் இருந்தனர். அவர்களை கலெக்டர் கண்டித்ததுடன், முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
கிருமி நாசினி
மேலும் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில் தேனியில் இருந்து இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நேற்று தொடங்கின. அதைத்தொடர்ந்து கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்தது. இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தேனி எடமால் தெரு, பகவதியம்மன் கோவில் தெரு, பெரியகுளம் சாலை, மதுரை சாலை ஆகிய பகுதிகளில் கலெக்டர் ஊர்வலமாக சென்று முக கவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் சுப்பையா, சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story