தமிழக அரசு, ஊரடங்கை அறிவிக்கும் முன்பு வணிகர்களிடம் கலந்து பேசி அறிவிப்பை வெளியிட வேண்டும் -விக்கிரமராஜா
தமிழக அரசு, ஊரடங்கை அறிவிக்கும் முன்பு வணிகர்களிடம் கலந்து பேசி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடலூரில் விக்கிரமராஜா கூறினார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா 3-வது அலை தமிழகத்தில் வராமல் தடுக்க, தமிழக முதல்-அமைச்சர் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அரசோடு இணைந்து அவர்கள் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வணிகர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதன்படி இந்த கூட்டத்திலும் வலியுறுத்தி உள்ளோம்.
வணிகர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். 2 தவணை தடுப்பூசியை கட்டாயம் போட வேண்டும். துணி எடுக்க விரும்பினால் ஒருவர் மட்டும் வந்தால் போதும், ஆனால் குடும்பமே துணிக்கடைக்கு வருகிறார்கள். இது போன்ற நிலையை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். கொரோனா 2-வது அலையில் மண்டலம் வாரியாக பிரித்து ஊரடங்கை அரசு அறிவித்தது.
கலந்து பேச வேண்டும்
ஆனால் தற்போது, அந்தந்த மாவட்ட கலெக்டர்களே அறிவிக்கிறார்கள். இதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. சென்னையில் ஒரு தெருவில் கடை மூடப்பட்டுள்ளது. பக்கத்து தெருவில் கடைகள் திறந்து இருக்கிறது. இது வணிகர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும். கோவை மாநகராட்சியில் காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி, பழங்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிராமங்களில் மளிகைக் கடைகளில் தான் பால், காய்கறி போன்றவை விற்பனை செய்யப்படும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். முன்அறிவிப்பு இன்றி அறிவிக்கப்படும் ஊரடங்கு உத்தரவால் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே தமிழக அரசு, ஊரடங்கை அறிவிக்கும் முன்பு வணிகர்களிடம் கலந்து பேசி அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.
Related Tags :
Next Story