வனத்துறை சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


வனத்துறை சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2021 10:39 PM IST (Updated: 2 Aug 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

ஊருக்குள் நுழையும் காட்டுயானையை பிடிக்கக்கோரி வனத்துறை சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கூடலூர்,

ஊருக்குள் நுழையும் காட்டுயானையை பிடிக்கக்கோரி வனத்துறை சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

காட்டுயானை அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி, முதுமலை புலிகள் காப்பக கரையோரம் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு கோவையில் அட்டகாசம் செய்து வந்த விநாயகன் என்ற காட்டுயானையை வனத்துறையினர் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் விட்டனர். இந்த யானை ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு தினமும் வந்து வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏச்சம்வயல் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரது வீட்டை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து உள்ளே வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தின்றது. இதையறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர்.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் விநாயகன் காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி நேற்று காலை 10 மணிக்கு ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமையில் ஏராளமான மக்கள் ஏச்சம்வயல் பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் மற்றும் முதுமலை வனத்துறையினர், போலீசார் வருவாய்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காட்டு யானையால் சேதமடைந்த பயிர்கள், வீடுகளை வனத்துறையினர் பார்வையிட்டனர்.

இந்த சமயத்தில் ஏச்சம்வயலில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புறப்பட்டு கூடலூர் தொரப்பள்ளிக்கு வந்தனர். பின்னர் அங்கு இருந்த முதுமலை வனத்துறை சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அப்போது வனத்துறைக்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து விநாயகன் காட்டு யானையை பிடிக்க வேண்டும், சேதமடைந்த பயிர் மற்றும் வீடுகளுக்கு நியாயமான இழப்பீடு தொகை வழங்க வேண்டும், இதற்கு தோட்டக்கலைத்துறை மற்றும் கட்டிட பொறியாளர்கள் மூலம் மதிப்பீடு நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம் முதுமலை கார்குடி வனச்சரகர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். காட்டு யானை ஊருக்குள் வராமல் இருக்க அகழி வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்ததால் அகழி தோண்டும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பணி மீண்டும் நடைபெற்று வருகிறது.

இது தவிர சேதமடைந்த பயிர்கள், வீடுகளுக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்குவது மற்றும் விநாயகன் காட்டுயானையை பிடிப்பது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதியளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் முதுமலை புலிகள் காப்பக இயக்குனரை சந்தித்து முறையிடுவது என்று பொதுமக்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.


Next Story