புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று மதிய உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வைரவன் உள்பட சங்க நிர்வாகிகள், வருவாய்த்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பதவியிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக துணை தாசில்தார்களுக்கு உடனே பதவி வழங்கிட வேண்டும், அலுவலக உதவியாளர் உள்பட அடிப்படை பணியாளர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.