தமிழக எல்லையில் சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை
கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தொற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
பொள்ளாச்சி
கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தொற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. தற்போது பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறைந்து வருகிறது. இதற்கிடையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழக-கேரள எல்லையோரங்களில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் உள்ள கோபாலபுரம், நடுப்புணி, வீரப்பகவுண்டனூர், மீனாட்சிபுரம், செமனாம்பதி, கோவிந்தாபுரம், ஜமீன்கோட்டாம்பட்டி, வடக்குக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்கிற சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரளாவில் இருந்து வரும் நபர்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுமக்கள் ஒத்துழைப்பு
கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறப்பட்டு உள்ளனரா? என்று சோதனை செய்யப்படுகிறது. இ-பாஸ் பெற்று வரும் வாகனங்கள் மட்டும் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
மேலும் கொரோனா தடுப்பூசி மற்றும் சளி மாதிரி சோதனையில் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கும் நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இ-பாஸ் இல்லாத வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களின் பதிவு எண், வாகனங்களில் வரும் நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டு எழுதி வருகின்றனர்.
கொரோனா தொற்று இல்லை என்கிற சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு சோதனை சாவடியில் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வேறு எங்கும் செல்ல கூடாது அறிவுறுத்தப்படுகிறது.
கேரளாவில் இருந்து யாராவது வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அவசர தேவைக்கு மட்டும் கேரளாவுக்கு செல்லலாம். தேவை இல்லாமல் கேரளாவுற்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே தமிழக-கேரள எல்லையான வீரப்ப கவுண்டனூர் போலீஸ் சோதனைச்சாவடியில் கிணத்துக்கடவு போலீசார், வருவாய்த்துறையினர், உள்ளாட்சித் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் இ-பாஸ், கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்தனர்.
மேலும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில், சோதனைச்சாவடியை கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது இ-பாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பப்பட்டது.
Related Tags :
Next Story