பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய ரவுடி கைது; நாட்டு வெடிகுண்டு பறிமுதல்
குலசேகரன்பட்டினத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த நாட்டு வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெட்ரோல் பங்க் ஊழியர்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கருங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் சிவகிருஷ்ணன். இவர் குலசேகரன்பட்டினம்- உடன்குடி மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மதியம் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்தபோது, தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் முத்து மல்லையாராஜ் (வயது 30), ஆலந்தலை சக்கரியாஸ் மகன் லயோ (32), குலசேகரன்பட்டினம் மாடசாமிபுரத்தைச் சேர்ந்த ராஜா மகன் ரமேஷ் என்ற பாம்பு ரமேஷ் (20) ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
ரவுடி கைது
அவர்கள், சிவகிருஷ்ணனிடம் தங்களது மோட்டார் சைக்கிளின் டேங்க் முழுவதும் பெட்ரோலை நிரப்புமாறும், அதற்கு பணம் தர மாட்டோம் என்றும் கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்த சிவகிருஷ்ணனை முத்து மல்லையாராஜ் உள்ளிட்ட 3 பேரும் தாக்கி, நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குலசேகரன்பட்டினம் மாடசாமிபுரத்தில் பதுங்கி இருந்த முத்து மல்லையாராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த நாட்டு வெடிகுண்டு, அரிவாள், 3 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முத்து மல்லையராஜ் மீது தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவர் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவான லயோ, ரமேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story