கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை. கலெக்டர் எச்சரிக்கை.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர்
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவல்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி வருகிற 9-ந் தேதி வரை நிபந்தனைகளுடன் ஊரடங்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்படாவிட்டால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பனை ஏற்படுத்தும் என்பதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கிருமிநாசினி கட்டாயம் வைக்கப்படுவதோடு உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அனைத்துக் கடைகளும் உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு கடைகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
கடும் நடவடிக்கை
பொது இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்ட உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குள சென்று மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வேலூர் மாவட்டத்தில் 3-வது அலை ஏற்படவே முடியாத வகையில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story