பட்டிவீரன்பட்டி அருகே பரபரப்பு சைரன் பொருத்திய காரில் வலம் வந்த போலி போலீஸ் அதிகாரி கைது அடையாள அட்டை துப்பாக்கி பறிமுதல்
பட்டிவீரன்பட்டி அருகே ‘சைரன்' பொருத்திய காரில் வலம் வந்த போலி போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை, துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பட்டிவீரன்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே, லட்சுமிபுரம் வத்தலக்குண்டு சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இதன் அருகே, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ‘சைரன்’ பொருத்திய கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரில் ‘காவல்' என்று எழுதப்பட்டிருந்தது. கோவை பதிவு எண் கொண்ட அந்த காரில், அரசு வாகனம் என்பதற்கான குறியீடான ‘ஜி’ என்ற ஆங்கில எழுத்தும் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த காரில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் வருவதாக முதலில் கருதினர். ஆனால் காரில் டிரைவரை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் அந்த காரை போலீசார் நிறுத்தினர்.
போலி உதவி கமிஷனர்
அப்போது காரை ஓட்டி வந்த டிப்-டாப் உடை அணிந்த ஒருவர் கீழே இறங்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன்னை போலீஸ் உதவி கமிஷனர் என்று கூறினார். ஆனால் அவர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்தார்.
இதற்கிடையே அவருடைய செயல்பாடுகள், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், சென்னை கொளத்தூர் ஜீவாநகரை சேர்ந்த சின்னப்பையன் மகன் விஜயன் (வயது 42) என்று தெரியவந்தது. பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துள்ள இவர், தன்னை போலீஸ் உதவி கமிஷனர் என கூறி வலம் வந்துள்ளார்.
அவரிடம் இருந்து போலீஸ் உதவி கமிஷனர் என்பதற்கான அடையாள அட்டை, துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் போலீசார் ஆய்வு செய்ததில் அவை போலியானது என்று தெரியவந்தது.
கார், சீருடை பறிமுதல்
இதேபோல் காரில் இருந்து போலீஸ் உதவி கமிஷனர் அணியக்கூடிய போலீஸ் சீருடை மற்றும் தொப்பி பறிமுதல் செய்யப்பட்டது. ‘சைரன்' பொருத்திய காரில் சென்னையில் இருந்து தேனிக்கு விஜயன் வந்துள்ளார்.
பின்னர் அவர் அங்கிருந்து திண்டுக்கல் நோக்கி வரும்போது வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கி இருக்கிறார். அவர் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. எதற்காக அவர் தேனிக்கு வந்தார்? என்பது குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே போலி உதவி கமிஷனர் சிக்கியது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்துக்கு, திண்டுக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் வந்து விஜயனிடம் விசாரணை நடத்தினார்.
சிறுவயது ஆசை
இதேபோல் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சுகுமாறன், ராஜபாண்டி ஆகியோர் விஜயனிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறு வயதில் இருந்தே போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்ததாகவும், அது நிறைவேறாததால் இதுபோன்று போலி அதிகாரியாக வலம் வந்ததாகவும் விஜயன் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் போலீஸ் அதிகாரி என்று தன்னை கூறி அவர் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசன் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்தார். போலி போலீஸ் உதவி கமிஷனர் கைது செய்யப்பட்ட சம்பவம் பட்டிவீரன்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story